2856.

     குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலா வே - அந்தக்
     குண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.

உரை:

     குண்டலியால் தூண்டப்பட்டுத் துவாத சாந்தத்தில் நின்றொளிரும் அமுத சந்திரனே, குண்டலினி சத்தி முடிவில் எய்தப்பெறும் ஞான வமுதத்தைப் பெற விரும்புகிறேன். எ.று.

     குண்டலி - மக்கள் உடம்பில் மூலாதாரத்தில் கிளம்பும் ஒருவகைச் சக்தி. இது சுவாதிட்டானம் மணிபூரகம் முதலிய நிலைகளினூடே துவாத சாந்தம் வரையிற் சென்று யோகிகட்கு அமுதபானம் செய்விப்பதாகும். சிவயோகிகள் துவாத சாந்தத்தில் சிவரூப சிவதரிசனம் செய்து சிவானந்தத்தைப் பெறுவர். குண்டலி சக்தியால் துவாத சாந்தத்தில் காணப்படும் அமுத சந்திரனை ஈண்டுக் “குண்டலிப்பால்” என்றும், சிவதரிசனம் பெற்ற ஆன்மா சிவயோகத்தால் சிவபோகம் பெறும் எனப் பெரியோர் உரைப்பதால் சிவபோகானந்தத்தைக் “குண்டலிப்பால் வேண்டுகின்றேன்” என்றும் கூறுகின்றார் இது குண்டலினி எனவும் வழங்கும்.

     இதனால், குண்டலினி சக்தியாற் பெறலாகும் சிவானந்தத்தை எய்த விரும்பியவாறாம்.

     (10)