2858.

     வித்திலாம லேவிளைந்த வெண்ணிலா வே - நீ தான்
     விளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலா வே.

உரை:

     வெண்ணிலவே, யாவும் வித்தாகிய காரண மில்லாமலே தோற்றுவிக்கப்பட்டுள்ளன என்பர்; அவை தோன்றிய இயல்பை எனக்குச் சொல்லுக. எ.று.

     காரணமின்றிக் காரியம் பிறவாது என்பதற்கு மாறாக உலகுகள் பலவும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன என்பாளாய், “வித்திலாமலே விளைந்த” என்று கூறுகிறாள். “விச்சதின்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணக முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய்” (சதக) என மாணிக்கவாசகர் உரைப்பது காண்க. அசத்தும் அசித்துமாகிய உலகம் சத்தும் சித்துமாகிய சிவத்தினின்றும் தோன்றற்கு முதலின்மையின் “வித்திலாமலே விளைந்த” என வுரைக்கின்றாள். விளைந்த - அன்பெறாத அகர வீற்றிப் பலவறிசொல். சிவசத்தியில் ஒடுங்கிக் கிடக்கும் மாயையாகிய பரிக்கிரக சத்தியைக் கலக்கி அதனினின்றும் உலகுகள் தோற்றுவிக்கப்பட்ட இயல்பை, “விளைந்த வண்ணம்” என்று குறிக்கின்றாள்.

     (12)