2859.

     முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த
     மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே.

உரை:

     வெண்ணிலவே, உலகு உயிர் இறை யென்ற மூன்றும் பிரமப் பொரு ளொன்றே என்பர்; அம்மூன்றும் ஒன்றாயவாறு என்னை. எ.று.

     பிரமம் ஒன்றே மூன்றாய் விரிந்த தெனப் பிரமவாதிகள் கூறுவதால், “முப்பொருளும் ஒன்ற தென்பார்” என வுரைக்கின்றாள். உலகுகள் மாயையிலும், மாயை சத்தியிலும், சத்தி சிவத்திலும் ஒடுங்கி ஒன்றாதல் கண்டு “மூன்றும் ஒன்றாய் முடிந்த தென்ன” என வினவுகின்றாள்.

     (13)