2862.

     வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
     வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே.

உரை:

     வெண்ணிலவே, வாசி வாசி என யோகிகளும் சிவஞானிகளும் சொல்லுகின்றார்கள். வாசி என்பது யாது? உரைப்பாயாக. எ.று.

     யோகிகள் இரேசக பூரகங்களால் அடக்கி வசப்படுத்தப்படும் மூச்சுக் காற்றினை வாசி என்பர்; அதனால் யோகம் கைவரும் என்பது கருத்து. சிவஞானிகள் சிவா என நிற்கும் இரண்டெழுத்துக்களையும் ஓதுவதும் சிந்திப்பதும் செய்தால் சிவயோக போகங்கள் எய்தப் பெறலாம் என்பர்; அவர்கள் வகரம் திருவருளையும், சிகரம் சிவத்தையும் குறிக்கும். இது பற்றியே, “வாசி யென்ன பேசு கண்டாய்” என வேண்டுகிறாள்.

     (16)