2864.

     ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலா வே - அது
     ஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலா வே.

உரை:

     ஓமென்னும் எழுத்தின்கண் திருவைந் தெழுத்தும் ஒடுங்கும் என்று பெரியோர் சிலர் இயம்புவர்; அதுவே ஊமை யெழுத்து எனப்படுவது ஏனோ? கூறுக. எ.று.

     ஓம் என்பது பிரணவம் என்னும் ஓரெழுத்தாம்; அதன் உட்பொருளாயவன் சிவ பெருமான்; சிவ வுருவாகிய எழுத்தைந்தும் அப்பிரணவப் பொருளாதலால், “ஓரெழுத்தில் ஐந்துண்டென்பர்” எனக் கூறுகின்றாள். அப்பிரணவம் ஓலிக்கப் படாமல் உள்ளத்துள் ஒடுங்கித் தியானப் பொருளாகும் போது ஊமை எழுத்து எனப்படுவதால் “ஊமை யெழுத்தாவதென்ன” என வினவுகிறாள். “உய்ய என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்றமெய்யா” (சிவபு) எனத் திருவாதவூரர் உரைப்பது காண்க. ஓரெழுத்தில் ஐந்தெழுத் துளவாதல் போலக் குமாராயநம என்ற ஆறெழுத்தும் கண்ட அருணகிரிநாதர், “ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே” (திருப்புகழ்) என்பர்.

     (18)