2866. அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
ஆடும்வகை எப்படியோ வெண்ணிலா வே.
உரை: வெண்ணிலவே, நம் பரமன் நிராதார மூர்த்தியாய்த் திருநடம் புரிகின்றார்; அவர் ஆடும் வகை ஒன்றும் தெரியவில்லை, காண். எ.று.
எல்லா வுலகுகட்கும் உயிர்கட்கும் தான் ஆதாரமாக அவையனைத்தையும் தனக்கு ஆதேயமாகக் கொண்டு இலகுவிக்கின்றானாயினும் அவன் தனக்குத் தானே ஆதாரமாய் ஆடல் புரிகின்றான் என்பாள், “அந்தரத்தில் ஆடுகின்றார்” எனவும், அதனை யுணர்ந்து கொள்ளுதல் அரிதாகலின் “ஆடும் வகை எப்படியோ” எனவும் இயம்புகிறாள். (20)
|