2867.

     அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலா வே - எங்கும்
     ஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.

உரை:

     வெண்ணிலவே, அணுவின் அணுவாயிருக்கும் பெருமானார் எங்கும் பரந்து நிற்கும் திறம் என்னையோ. எ.று.

     நிலவணு நீரணுவென நிலவும் அணுத் திரளில் ஒவ்வோ ரணுவிலும் உயிர்ப்பணுவாய் அவற்றின் ஆற்றல் முறை திறம்பாமல் இயலுதற்கேதுவாதல் தோன்ற, “அணுவில் அணுவாய் இருந்தார்” என வுரைக்கின்றாள். இருந்தார் என இறந்த காலத்தால் உரைப்பது, அவரது இருப்பின் துணிவு வற்புறுத்தற் கென அறிக. அணுவா யிருக்கும் ஒன்று எங்குமாகி யிருப்பது வியத்தற் குரியதாகலின், “எங்குமாகி நின்ற வண்ணம் என்ன” என வினவுகின்றாள்.

     (21)