2868. அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர்
ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலா வே.
உரை: வெண்ணிலவே, காணப்படும் அண்டங்களும் அப்பாலுள்ள அண்டங்களும் ஆகியவை யெல்லாம் தலைவராகிய அப்பரமனது திருக்கூத்து நிகழுமிடம் என்று சொல்வதன் கருத்து என்னையோ. எ.று.
அண்டம் - வானத்தால் சூழப்பட்டு நம்மாற் காணப்படுவது. இதனைப் புராணிகர் பிரமனிட்ட முட்டை யென்றமையின், அதனைக் குறிக்கும் அண்டம் என்ற சொல்லாற் பெயர் கூறலாயினர். இந்த அண்ட முகட்டுக்கு அப்பால் பல அண்டங்கள் உண்டென்றலின் அவற்றைப் பகிரண்டம் என உரைக்கின்றார்கள். பகிரண்டங்கள் ஆயிரத்தெட் டென்பாரும் உளர். திருவாதவூரர் “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் அளப்பருந் தன்மை” (அண்டத்) என்பர். இவ் வண்டங்களின் அளப்பருந் தன்மையும் வளப்பெருங்காட்சியும் சிவ பரம்பொருளின் திருக்கூத்தின் விளைவா மென அறிஞர் கூறுவது கொண்டு, “ஐயர் ஆட்டமென்று சொல்வ தென்ன” எனக் கேட்கின்றாள். இவற்றைப் படைத்தலும் ஒடுக்குதலும் சிவபரம் பொருட்கு விளையாட் டென்பதாம். (22)
|