2869. அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை
ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே.
உரை: வெண்ணிலவே, தில்லையம்பலத்தில் ஆடுகின்ற சிவபெருமான் இவ்வுலகில் என்னை ஆட்டுகின்றார். எ.று.
தில்லையம்பலத்தில் உருவ நடனமும் ஞான வம்பலத்தில் அருவ நடனமும் செய்கின்றாராதலின், பொதுவகையில் “அம்பலத்தில் ஆடுகின்றார்” எனக் கூறுகின்றார். அவருடைய இருவகைக் கூத்தும் உயிர்த் திரளை இயக்குதலால் “என்னை இம்பரத்தே ஆட்டுகின்றார்” என மொழிகின்றாள். இம்பர் இம்பரம் என வந்தது. (23)
|