2872. துன்னுகின்ற தீமைநின்பாற் சூழ்ந்துரைக்குந் தோறுமதை
உன்னுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா.
உரை: செய்தாரை விடாது நெருங்குகின்ற தீவினையை நினைந்து ஆய்ந்து வாயால் சொல்லுந் தோறும், சொல்லியதை மீள நினைக்கும் போது, எய்தக் கடவ துன்பம் என்னுள் ஊடுருவுகின்றது, காண்க. எ.று.
தன்னைச் செய்தவரை விடாது பற்றிக் கொள்வது வினைக்கு இயல்பாகலின், தீவினையை, “துன்னுகின்ற தீமை” எனத் தெரிவிக்கின்றார். தீது சொல்லுவோர் தீர வெண்ணிச் சொல்வதும், எண்ணாமலே பேசுவதும் செய்வர். எண்ணுங்கால் நற்பண்புடையோர் தீது செய்தற்கும் எழும் தீ நினைவை மாற்றிப் போக்கி விடுவர்; தீய பண்புடையோர் தீமை மிகுதற் குரியவற்றை எண்ணிச் சொல்லுவராதலின், “சூழ்ந்து உரைக்குந் தோறும்” எனவும், சொல்லிய பின் மனத்தின் வெம்மை தணியுமிடத்து நல்லுணர்வு தோன்றிச் சொல்லின் தீமையைக் காட்டும் போது வருத்தம் விளங்க, “உன்னுகின்ற போதில் எனக்கு ஊடுருவிப் போகுது” எனவும் இசைக்கின்றார். (3)
|