2873. எள்ளுகின்ற தீமைநின்பா லெண்ணுகின்ற தோறுமதை
உள்ளுகின்ற போதிலெனக் கூடுருவிப் போகுதடா.
உரை: இகழ்ந்து விலக்குதற்குரிய தீவினையை நின்னோடு கலந்து சிந்திக்கும்தோறும், அத் தீவினையின் தீமையை உள்ளத்தில் எண்ணும் போது அதன் குற்றம் நெஞ்சில் ஊடுருவி வருத்துகிறது. காண். எ.று.
எள்ளல் - இகழ்தல். செய்த குற்றத்தைத் தோழனுக்குச் சொல்லி அளவளாவுவது சிலர்க்கு இயல்பாதலால், “எள்ளுகின்ற தீமை நின்பால் எண்ணுகின்ற தோறும்” எனவும், தனித்திருந்து நினைத்தலுண்மையின், “உள்ளுகின்ற போதில்” எனவும் உரைகின்றார். உள்ளுதல் - நினைவிற் கொணர்தல். (4)
|