2874.

     மிக்க நிலைநிற்க விரும்பேன் பிழைகளெலாம்
     ஒக்க நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.

உரை:

     சொற் செயல்களில் மிகைபடும் அளவு செய்ய விரும்புவதில்லேனாயினும், செய் பிழைகளை நிரல்பட நிறுத்தி எண்ணுமிடத்து வருத்தம் தோன்றி என்னுள் ஊடுருவுகின்றது, காண். எ.று.

     செய்வ தொன்று அறமாயினும் அளவின் மிக்க விடத்து வெறுக்கப் படுதலின், அதனை விரும்புவதில்லை என்பார், “மிக்க நிலை நிற்க விரும்பேன்” எனத் தமது உட்கோளை விரும்புகின்றார். மிக்கநிலை பிழைகட்குக் காரணமாதலின், அதனால் உண்டாகும் பிழைகளைக் குறையாக எண்ணிப் பார்க்கையில் நெஞ்சம் வருந்துகிற தென்பாராய், “ஒக்க நினைக்கிலெனக்கு ஊடுருவிப்போகுது” என்று கூறுகிறார்.

     (5)