2876.

     பித்து மனக்கொடியேன் பேசியவன் சொல்லையெலாம்
     ஒத்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.

உரை:

     பித்தேறிய மனத்தையுடைய கொடியவனான யான் பேசிய வன்சொற்களை எல்லாம் ஒத்து நினைக்கும்போது எய்தும் வருத்தம் உள்ளத்தில் ஊடுருவி நிற்கிறது, காண். எ.று.

     பித்து - ஆசை மிகுதியால் உளதாகும் மயக்கம்; மண், பெண், பொன் என்ற மூன்றன் மேல் உண்டாகும் ஆசை மிகுதி பித்தெனப்படும். ஆசை மிகுதி பற்றி மேற்கொள்ளும் செயல்கட்கு இடையூறு தோன்றின், மனம் கொடுமை நினைவுற்றுச் சினம் மிகுந்து வன்சொற்களை வழங்குவித்தலால் “பேசிய வன்சொல்லை யெலாம்” எனவும், அச்சொற்களைக் கேட்டவர்கள் எய்திய துன்பமும், அவற்றால் விளைந்த தீமையும் நெஞ்சை வருத்துவதால், “ஒத்து நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா” எனவும் கூறுகின்றார். ஒத்து நினைத்தலாவது - மனமும் அறிவும் சமநிலையினின்று நினைப்பது.

     (7)