2878. நிறுத்தி யறியே நிகழ்த்தியவன் சொல்லை
உறுத்தி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
உரை: நிகழ்ந்தவற்றை முறைப்பட நிறுத்தி எண்ணி யறியாமையால் யான் பேசிய வன் சொற்களனைத்தையும் உறுத்தி நினைக்குங்கால் உள்ள முழுதும் அவை யூடுருவி வருத்துகின்றன, காண். எ.று.
நிறுத்தி யறிதற்குரியன வருவிக்கப்பட்டன. தூயவறிவுடைய பெரியவர்க்கே அஃது செயல் படுமாதலால், அது செய்யாது சிறுமையுற்றமை பற்றி, “நிறுத்தி யறியேன்” என்கின்றார். அறியேன் - அறிவதைச் செய்யேன், உறுத்துதல் - மீள வருவித்து நினைத்தல்; நினைவுகூர்தலுமாம். (9)
|