2879. தோன்றி விரியுமனத் துட்டனேன் வன்பிழையை
ஊன்றி நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
உரை: தோன்றுகிற பிழை மிகச் சிறிதாயினும் பெரிதாக விரித்துக் காணும் மனமுடைமையால் துட்டனாகிய யான் செய்துள்ள பெரிய குற்றங்களை ஆழ்ந்து சிந்திக்கின் அங்க முழுதும் ஊடுருவுகின்றது, காண், எ.று.
காணப்பட்ட பிழை எளிதிற் பொறுத்தாற்றும் சிறுமையுடையதாக இருப்பினும் அதனைப் பெரிதாக்கிக் காட்டுவது மனப் பண்பாதலால், “தோன்றி விரியும் மனத்துட்டனேன்” என்று கூறுகிறார். மனம் காட்டிய வழி நின்று பிழை செய்பவன் துட்டன். துஷ்டன் துட்டன் - என வந்தது. துட்டன் செய்வன யாவும் பெரும் பிழையாய் முடிவனவாதலின், “வன்பிழை” எனக் கூறுகின்றார். (10)
|