2880.

     எண்ணினைப்ப தின்றிநினை யெள்ளி யுரைத்ததனை
     உண்ணினைக்குந் தோறுமெனக் குள்ள முருகுதடா.

உரை:

     நலம் பலவற்றையும் எண்ணி மனத்தால் நினைப்பதை விடுத்து நின்னைப் பழித்துரைத்த செய்தியை உள்ளே நினைக்குந் தோறும் எனக்கு உள்ளமெல்லாம் உருகுகிறது, காண். எ.று.

     சிவனுடைய நலங்கள் எண்ணிறந்தனவாகலின் சில பலவற்றையேனும் நினைந்து புகழ்வதை விட்டுப் பழித்துப் பாடிய துண்டு (2780 காண்க). அதனை யுள்ளத்தில் நினைவு கூரும்போது என் மனம் உருகுகின்றது என்பார், “எள்ளி யுரைத்ததனை உண்ணி நினைக்குந்தோறும் எனக்கு உள்ளம் உருகுதடா” என வுரைக்கின்றார். இனி வருவனவற்றுட் காணப்படும் “அடா” என்பது இரக்கக் குறிப்புணர்த்துவதாகக் கொள்க.

     (11)