2882. பித்தனெனத் தீமை பிதற்றியதெண் ணுந்தோறும்
உத்தமனே யென்னுடைய வுள்ள முருகுதடா.
உரை: உத்தமப் பொருளாகிய சிவனே, உன்னைப் பித்தனென்று குற்றப்பட நான் வாய் வதறியதை நினைக்கும் போதெல்லாம் என்னுடைய நெஞ்சம் உருகுகிறது. காண். எ.று.
“நமலம் அறுப்பார் பித்தரெனும் நாமம் உடையார்” (1703) எனப் பாடினமையின், “பித்தனெனத் தீமை பிதற்றியது” எனக் கூறுகின்றார். மக்களைப் போல வாத பித்த சிலேத்துமங்களையுடைய திருமேனியனல்லனாதலின், சிவனைப் பித்தனெனல் குற்றம்; அன்றியும் பித்தனெனப் படுபவன் மக்களினத்தில் உயர்ந்தவனாகக் கருதப்படானாகலின், பித்தனென வுரைப்பதை, “பித்தனெனத் தீமை பிதற்றியது” எனச் சொல்லி வருந்துகிறார். (13)
|