2883. மன்றுடையாய் நின்னருளை வைதகொடுஞ் சொற்பொருளில்
ஒன்றை நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
உரை: தில்லையம்பலத்தையுடைய சிவபெருமானே, நின்னுடைய அருட் செயல்களைப் பழித்துப் பேசிய என் சொற்களின் பொருளில் ஒன்றை நினைத்தாலும் என் மனம் இப்போது உருகுகின்றது, காண். எ.று.
மன்று - தில்லையம்பலம். பிறை சூடியதும், கங்கையைச் சடையிற் கொண்டதும், மங்கை பங்கனானதும், என்பு மாலையணிந்ததும், விட முண்டதும், புரமெரித்ததும், மதுரையிற் பல திருவிளையாடல் புரிந்ததும், முனி மகளிர்பால் பலி திரிந்ததும், பிறவும் ஆகிய அகத்துறைக்கண் செவிலி முதலிய தாயர் தோழியர் கழறிக் கூறிய கூற்றுக்களில் இங்கிதமாகப் பழித்துரைகள் உரைக்கப்பட்டதை நினைந்து வருந்துமாறு புலப்பட “வைத கொடுஞ் சொற் பொருளில் ஒன்றை நினைக்கின் உள்ளம் உருகுதா” என ஓதுகின்றார். (14)
|