2885.

     புலைக்கொடியேன் புன்சொற் புகன்றதெண் ணுந்தோறும்
     உலைக்கண்மெழு காகவென்ற னுள்ள முருகுதடா.

உரை:

     புலைத் தன்மையும் கொடுமைப் பண்புமுடைய யான் பேசிய புன்மொழிகளை எண்ணும் போதெல்லாம் உலைத் தீயிலிட்ட மெழுகு போல என் நெஞ்சம் உருகுகிறது, காண். எ.று.

     புலைத் தன்மை - புலால் உண்ணும் இயல்பு. புன்சொல் - தெளிவில்லாத சொற்கள். “தேற்றாப் புன்சொல் நோற்றிசின்” (புறம்) எனச் சான்றோர் வழங்குவதறிக. உயர்ந்தோர் திருமுன் புன்சொற்களைப் பேசுதல் குற்றமாதலின், அதனால் மன முருகுதலைக் கூறுகின்றார்.

     (16)