2887. புரைத்தமன வஞ்சப் புலையேன் றிருவருளை
உரைத்தபிழை யெண்ணிலெனக் குள்ள முருகுதடா.
உரை: குற்றம் நிறைந்த நெஞ்சமும் வஞ்சனையும் புலைத் தன்மையும் உடைய யான் நினது திருவருளின் நலத்தை எண்ணாமற் பேசிய குற்றங்களை நினைத்தால் எனது மனம் நீரா யுருகுகிறது, காண். எ.று.
புரை - குற்றம். புரைத்த மனம் - உள்ளொன்று மில்லாத ஓட்டை நெஞ்சம் என்றுமாம். வஞ்சக் கருத்தும் புரை யுணர்வும் என விலக்கப்பட்டவை தன்பால் உடைமை கூறுவார், “வஞ்சப் புலையேன்” என்று கூறுகின்றார். நலம் பயக்கும் திருவருளைத் தீது செய்வது போலப் பழித்தல் பிழையாதலால் “திருவருளை யுரைத்த பிழையை யெண்ணில் உள்ளம் உருகுதடா” என வுரைக்கின்றார். (18)
|