2888. நாடி நினையா நவையுடையேன் புன்சொலெலாம்
ஓடி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
உரை: நலம் தீங்குகளை ஆராய்ந்து காணாத குற்றமுடைய யான் உரைத்த புன்சொற்களனைத்தையும் மீள நினைக்கும்போது எனக்கு மனம் உருகுகிறது, காண். எ.று.
நாடுதல் - நலம் தீமைகளை ஆராய்தல். நலந் தீங்குகளைக் காணாது பேசுதல் குற்றமாதலால், “நாடி நினையா நவை யுடையேன்” என்று இசைக்கின்றார். நவை - குற்றம். நவை யுடையார் பேசுவன குற்றமுடையவாதல் கண்டு, அவற்றைப் “புன்சொல்” என்று புகல்கின்றார். ஓடி நினைத்தல் - நெடிது நினைத்தல். (19)
|