2890. அஞ்சலென்றாய் நின்பால் அடாதமொழி பேசியதை
அஞ்சி நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
உரை: அஞ்சாதே என அருளுரை வழங்குகின்ற பெருமானே, நின் திருமுன் ஒவ்வாதவற்றை யான் உரைத்ததை அச்சத்தோடு நினைக்கும்போது என்னுடைய ஐம்பொறிகளும் நிலை கலங்குகின்றன, காண். எ.று.
திருவருள் நெறி யறிந்து அதன் அருமை கண்டு யான் அஞ்சினபோது அச்சம் தவிர்த்து நெறி காட்டினமை பற்றி, “அஞ்சலென்றாய்” என வுரைக்கின்றார். அஞ்சலெனக் குறிக்கும் கையை “அபய கரம்” என்பர்; அதனால் அஞ்ச லென்றாய் என்றலும் உண்டு. அடாத மொழி - இறைவன் பெருமைக்கு ஒவ்வாதவற்றை உரைப்பது; அடுக்கும் மொழி, யாவரும் தக்கதெனப் போற்றும் மொழி, பேசு முன்னரும், பேசும் போதும் தோன்றாத அச்சம், பேசிய பின்பு தெளிவு நிலையில் தோன்றுதலால், “அஞ்சி நினைக்கில்” என்றும், நினைக்கையில் வரக் கடவ துன்பங்கள் பொறி புலன்களைந்தையும் கலக்கி விடுதலால், “அஞ்சும் கலங்குதடா” என்றும் எடுத்துரைக்கின்றார். (21)
|