2891.

     மெய்யோர் சிறிதுமிலேன் வீண்மொழியா லூடியதை
     ஐயோ நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.

உரை:

     மெய் பேசும் செயல் சிறிதும் இல்லாத யான் வீண் பேச்சுக்களைச் சொல்லிப் பிணங்கியதை இப்போது நினைத்தால், ஐயோ, என் பொறி புலன் ஐந்தும் நிலை கலங்குகின்றன. எ.று.

     மெய் பேசுவது நற்பண்பாகவும், அது சிறிதும் தன்பால் இல்லையென்பார், “மெய்யோர் சிறிது மில்லேன்” என்று கூறுகின்றார். மெய்யே மொழியுமிடத்து வீண்பேச்சுக்கு இடமில்லை. பொய் புகலுமிடத்துத்தான் வீணுரையும் பூசலும் கலகமும் தோன்றும்; அதனால் வீணுரையாடிக் குற்றப் பட்டேன்; அதனால் உளவாகும் துன்பங்களை நினைக்கின் அச்சம் மிகுந்து பொறியைந்தும் கலங்குவது விளங்க, “அஞ்சும் கலங்குதடா” என வருந்துகின்றார்.

     (22)