2893. பொய்யால் விரிந்த புலைமனத்தேன் செய்பிழையை
ஐயா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
உரை: பொய்ந் நினைவுகளால் மிக்குற்று புலைத் தன்மையையுடைய மனத்தை யுடையனாதலால் செய்பிழைகளை நினைக்கும்போது, ஐயனே, என் பொறி புலன்களைந்தும் கலங்குகின்றன, காண். எ.று.
பொய்ந் நினைவும், பொய் யுரையும் பொய்ச் செய்கையும் மிக்குற்றமையும், அதற்கு மனம் ஏதுவாதலையும் காட்டற்குப் “பொய்யால் விரிந்த புலை மனத்தேன்” என்று புகல்கின்றார். பொய், கொலை, களவு, காம முதலிய பெருங் குற்றங்கட்குக் காரணமும் கருவியுமாதலின், மனத்தைப் “புலை மனம்” என்று கூறுகின்றார். (24)
|