2897.

     எச்சோடு மில்லா திழிந்தேன் பிழைகளெலாம்
     அச்சோ நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.

உரை:

     யாதும் நிகராதபடிக் கீழ்ப்பட்ட என் பிழைகளை இப்போது நினைக்குங்கால் பொறி புலன்கள் ஐந்தும் கலங்குகின்றன, காண். எ.று.

     சோடு - ஒப்பு. இது பெரும்பாலும் இணை என்ற பொருளில் வழங்கும். குற்றம் செய்து கீழ்மை யுறுபவரில் எனக்கு நிகராவார் ஒருவரும் இல்லையென்னும் அளவு தாழ்வுற்றேன் என்றற்கு “எச்சோடும் இல்லா திழிந்தேன்” என்று இயம்புகின்றார். அச்சோ - இரக்கக் குறிப்பு.

     (28)