2898. வந்தோடி நைமனத்து வஞ்சகனேன் வஞ்சமெலாம்
அந்தோ நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
உரை: இங்கு மங்கும் வந்தும் ஓடியும் வருந்தி மெலிகின்ற மனத்தையுடைய வஞ்சகனாகையால், இப்போது அவ்வஞ்சனைகளை நினைக்கும்போது பொறி புலன் ஐந்தும் கலங்குகின்றன, காண். எ.று.
“தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும், தன்மை முன்னிலையாயீரிடத்த” (சொல்.29) என்ற தொல்காப்பியத்தின் உரையில் ஈங்கு ஆங்கு என்பவற்றைச் சான்றோர் தன்மைக்கண் காட்டுதல் நோக்குக. நைமனம், வினைத்தொகையால் நைகின்ற மனம் எனப் பொருள் கொண்டு நிற்கிறது. நைதல் - வருந்தி மெலிதல். வருத்தத்தின் நீங்கற்கு வஞ்ச நினைவுற்று மீளவும் வருத்தத்தி லாழ்தல் நெஞ்சின் இயல்பாதலால், “வஞ்சகனேன் வஞ்சமெலாம்” என வுரைக்கின்றார். அந்தோ - இரக்கக் குறிப்பு. (29)
|