2899.

     ஓவாக் கொடியே னுரைத்த பிழைகளெலாம்
     ஆவா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.

உரை:

     நீங்காத கொடுமை யுடையவனாகையால் நான் பேசிய குற்றங்களை யெல்லாம் நினைக்கும்போது, ஆ! ஆ! என் பொறி புலன் ஐந்தும் கலங்குகின்றன, காண். எ.று.

     ஓவுதல் - நீங்குதல். கொடியேன், நெறி கோடித் தீமை செய்பவன். உரைத்தன யாவும் குற்றமாய்த் துன்பம் விளைவித்தலால் “பிழைகளெலாம் நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா” எனக் கூறுகின்றார். ஆ ஆ - ஆவா என வந்தது. “ஆவா இருவர் அறியாவடி” (திருக்கோ. 72) என வருதல் காண்க.

     (30)