2900.

     கரைசேர வெண்ணாக் கடையேன் பிழையை
     அரைசே நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.

உரை:

     அம்பலத்தரசே, நற்கதி யடைய மாட்டாத கீழ்மகனாகிய எனது பிழைகளை இப்போது நினைக்கும் போது பொறி புலனைந்தும் நிலை கலங்குகின்றன, காண். எ.று.

     வாழ்க்கை துன்பக் கடல் போலுவதால், இன்ப நிலையமாகிய நற்கதியைக் “கரை” எனக் கூறுகின்றார். கரை சேர எண்ணிய வழிக்கடையனாகும் செயல்களை ஒருவன் நினைக்க மாட்டானென்றற்குக் “கரை சேர எண்ணாக் கடையேன்” என்று வருந்துகிறார். அம்பலத்தில் விளங்கும் ஆடலரசனை நினைந்து மொழிதல் பற்றி, “அரைசே” என்கின்றார். அரசு - எதுகை நயம் பற்றி “அரைசே” என வருகிறது. “சீருடைச் சிவபுரத்தரைசே” (கோயிற்) என்பது திருவாசகம்.

     (31)