2901.

     மருளுடையேன் வஞ்ச மனத்தீமை யெல்லாம்
     அருளுடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா.

உரை:

     அருளே செல்வமாக வுடைய பெருமானே, மருள் நிறைந்த எனது வஞ்ச மிக்க மனத்தால் உண்டாகிய தீங்குகளனைத்தையும் எண்ணும்போது பொறி புலனைந்தும் கலங்குகின்றன, காண். எ.று.

     மருள் - மயக்கம்; தெளிவின்மையுமாம். மருண்ட மனத்தினால் வஞ்ச நினைவும் தீய செயலும் புரிபவன் என்றற்கு “மருளுடையேன் வஞ்ச மனத் தீமை” என விளம்புகின்றார்.

     (32)