2903.

     வற்புதனேன் வஞ்ச மனப்பிழையை மன்றாடும்
     அற்புதனே யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா.

உரை:

     அம்பலத்தில் ஆடுகின்ற அற்புதப் பெருமானே, கீழ்மகனாகிய என்னுடைய வஞ்சனை நிறைந்த மனத்தால் விளைந்த குற்றங்களை நினைத்தால் என் பொறி புலனைந்தும் கலங்குகின்றன, காண். எ.று.

     தில்லையம்பலத்தில் அற்புதத் திருக்கூத்தாடுவதால், சிவபெருமானை, “மன்றாடும் அற்புதனே” எனப் புகழ்கின்றார். அரிய உயரி தோற்றமும் செயலு முடையவன், அற்புதன். அற்புதனுக்கு மறுதலை, வன்புதன் என்பது; எளிய இழிந்த தோற்றமும் செயலு முடையவன் என்பது பொருள். வஞ்ச நினைவுகளை யுடைய மனம், வஞ்சமனம் எனப்படுகிறது. எல்லாக் குற்றங்களுக்கும் மனம் காரணமாதலால், “வஞ்ச மனம்” எனப் பழிக்கின்றார்.

     (34)