2904. துன்புடையேன் புன்மொழிகள் தூற்றியதை யெவ்வுயிர்க்கும்
அன்புடையா யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
உரை: எல்லா வுயிரிடத்தும் அன்பு செய்யும் பெருமானே, துன்பம் மிக வுடையவனாகிய யான் புன்சொற்களால் உன்னையும் பிறரையும் தூற்றிப் பேசிய சொற்களை இப்போது எண்ணும்போது என் பொறி புலன்கள் ஐந்தும் நிலை கலங்குகின்றன. காண். எ.று.
எல்லா வுயிர்களிடத்தும் உணர்வாய் எழுந்தருளுவ தொன்றே எவ்வுயிர்பாலும் அன்புடைய தென்பதை வற்புறுத்துதலால், “எவ்வுயிர்க்கும் அன்புடையாய்” என மொழிகின்றார். துன்பங்கள் தோன்றி வருத்தும்போது எவரையும் தூற்றிப் பேசும் நிலை மக்களிடையே யுண்டாதலும், தெளிவு நிலையில் அதனால் உளதாகும் துன்பத்தை நினைத்தலும் நிகழ்தலால், “புன் மொழிகள் தூற்றியதை எண்ணில்” எனக் கூறுகின்றார். தூற்றுதல் - இன்னாச் சொற்களால் ஏசிப் பேசுதல். (35)
|