2906.

     சினங்கொண்ட போதெல்லாஞ் செப்பிய வன்சொல்லை
     மனங்கொள்ளுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.

உரை:

     கோப முண்டான போதுகளில் நான் பேசிய கொடிய சொற்களை இப்போது எண்ணும் போதெல்லாம் என் உள்ளத்தை அக்குற்றம் வாளால் அறுப்பது போன்ற துயரத்தைச் செய்கின்றன, காண். எ.று.

     சினம் - கோபம். சின முண்டாகிற போது நல்லறிவு மழுங்கி விடுதலால், சொல்லும் செயலும் துன்பம் விளைவிப்பதால், “செப்பிய வன் சொல்லை மனம் கொள்ளும் தோறும் வாளிட் டறுக்குதடா” எனக் கூறுகின்றார். மனம் கொள்ளுதல் - நினைவு கூர்தல்.

     (37)