2910.

     ஊடுகின்ற சொல்லா லுரைத்ததனை யெண்ணியெண்ணி
     வாடுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.

உரை:

     மக்களோடு உரையாடும் போது கேட்பவர் பிணங்கி நீங்கத் தக்க சொற்களைச் சொல்லியதை இப்போது நினைந்து மனம் வருந்தும் போதெல்லாம் வாளால் அறுக்கப்பட்டது போலத் துன்புறுத்துகின்றது, காண். எ.று.

     ஊடுதல் - பிணங்குதல். பிணக்கம் கருத்து வேறு பட்டால் உளதாவது; கருத்து வேறுபாடு பற்றிப் பிணங்கி வன்சொல் வழங்குவது குற்றமாதலால், பிணங்கிய சொற்களைப் பேசியது நினைந்து வருந்துகின்றார்.

     (41)