2911.

     உயங்குகின்றேன் வன்சொல் லுரைத்ததனை யெண்ணி
     மயங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.

உரை:

     வன்சொற்கள் பேசியதற்கு வருந்துவேனாயினும், பேசியதை மீளவும் நினைந்து அறிவு அயர்கின்றது; அயருந் தோறும் மனம் வாள் கொண்டறுப்பது போல நோயுறுகின்றது, காண். எ.று.

     முற்றவும் கடியும் குற்றமன்மையின், சினத்தால் செப்பியதை நல்லறி வுடையோர் மீள மீள நினைந்து வருந்துவராதலால், “உயங்குகின்றேன்” என வுரைக்கின்றார். வெகுண்ட போது அறிவு மழுங்குவதால், அதனால் பிறந்த வன்சொற்களை நினைக்கையில் அறிவு சோர்ந்தமைக்கு வருந்துமாறு புலப்பட, “எண்ணி மயங்குகின்ற தோறும்” எனக் கூறுகின்றார்.

     (42)