2912. சொல்விளைவு நோக்காதே சொன்னதெலா மெண்ணுதொறும்
வல்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
உரை: சொல்லும் சொல்லால் உண்டாகும் நலம் தீங்குகளை எண்ணாமல் சொல்லிய சொற்களை நினைக்கும்போது, கொடிய வினையையுடைய மனத்தை அவை வாள் கொண்டு அறுப்பது போல வருத்தம் செய்கின்றன, காண். எ.று.
இன்சொல் இனிதீன்றலும் வன்சொல் தீது பயத்தலும் இயல்பாகலின், “சொல் விளைவு நோக்காதே சொன்னதெலாம் எண்ணுதொறும்” என்று சொல்லுகின்றார். (43)
|