2913.

     மேல்விளைவு நோக்காதே வேறுசொன்ன தெண்ணுதொறும்
     மால்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.

உரை:

     எதிர்காலத்தில் இன்னது பயக்கும் என்று நினையாமல் வேறுபடப் பேசிய சொற்களை நினக்கும் போதெல்லாம் வினையேனாகிய என் மனத்தை அந்நினைவு வாளால் அறுப்பது போலும் துன்பம் செய்கிறது, காண். எ.று.

     மேல் விளைவு - நாளை நிகழ்வது, வேறு சொன்னது, நண்பரும் வெறுத்து வேறுபட நினைக்குமாறு பேசியது. மால்வினை - தனக்குரிய பயனை நுகர்வித்தல்லது நீங்காத பெரிய வன்மையையுடைய வினை; மயக்க வுணர்வை நல்கும் வினை யெனினும் பொருந்தும்.

     (44)