2916. தூய்மையிலா வன்மொழியாற் சொன்னவெலா மெண்ணுதொறும்
வாய்மையிலே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
உரை: வாய்மைப் பண்பில்லாத யான் சில சமயங்களில் மாசு படிந்த வன்மையாகப் பேசிய சொற்களை நினையும்போது என் மனம் வாளால் அறுப்புண்பது போல வருந்துகிறது, காண். எ.று.
யாதும் தீங்கு பயவாத சொற்களைப் பேசுவது வாய்மை. அஃது இல்லாமையால் கேட்போர் மனம் புண்படச் சொல்வது “தூய்மையிலா வன்மொழி” எனப்படுகிறது. தூய்மை வாய்மையால் உண்டாவதாதலால் வாய்மையிலேன் எனக் கூறுகின்றார். “தூய்மை யென்பது அவாவின்மை மற்றது, வாய்மை வேண்ட வரும்” (குறள்) எனச் சான்றோர் கூறுவது காண்க. (47)
|