2919. பொருந்துகின்ற வஞ்சப் புதுமையெண்ணி யையோ
வருந்துகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
உரை: வஞ்சனையாக இடத்துக்கும் காலத்துக்கும் பொருந்தப் பேசும் போது கலக்கும் புதுக் கற்பனைகளை நினைக்கும்போது, உள்ளம் வருந்துவது வாளிட் டறுப்பது போல்கிறது, காண். எ.று.
பொய்யை மெய் போலப் பேசுவதும், இடத்துக்கும் காலத்துக்கும் ஒப்பக் கற்பனை யமைத்துப் பேசுவதும் வஞ்சனை வகையாகலின், “பொருந்துகின்ற வஞ்சப் புதுமை” எனப் புகல்கின்றார். அது நல்லோர் மனத்தில் மிக்க வருத்தத்தை உறுவிப்பதால், “உள்ளே வாளிட் டறுக்குதடா” என வுரைக்கின்றார். (50)
|