2921.

     ஊடும்போ துன்னை நுரைத்தவெலா நாயடியேன்
     நாடும்போ தெல்லாமென் னாடி நடுங்குதடா.

உரை:

     உன்னோடு அன்பாற் பிணங்கியபோது நாயினும் கடையேனாகிய நான் கூறிய சொற்களை யெல்லாம் மீள நினைக்கிறபோது என் தேகத்திலுள்ள நாடிகள் யாவும் அடங்கி யொழிகின்றன, காண். எ.று.

     ஊடுதல் - அன்பினாற் பிணங்குதல். காதலர் கூட்டத்தில் அன்பு மிகுதியால் ஊடலும் பின்னர்க் கூடலும் உண்டாகுமாயினும் ஊடற் காலத்தில் பிணங்கும் சொற்கள் தோன்றுத லுண்டு. அவற்றுள் வெவ்விய சொற்கள் பிறத்தற்கு இடமுண்டு. அதனால் “ஊடும் போதுன்னை யுரைத்த வெலாம்” என வுரைக்கின்றார். நாடுதல் - எண்ணுதல்; நினைத்தலுமாம். தேகத்தில் உள்ள குருதி பாயும் நரம்புகள், நாடி எனப்படும். குருதி யோட்டம் நாடித் துடிப்பாம். அச்சம், அவலம் முதலியன தோன்றும்போது நாடித் துடிப்பு விரைந்து இயங்கும். விரைந்த துடிப்பு மிக்க சோர்வு பயக்குமாதலால், “நாடிநடுங்குதடா”ல் எனக் கூறுகின்றார். நடுங்குதல்-ஈண்டு மிக்க துடிப்பின் மேற்று.

     (52)