2922.

     வாய்க்கடையா வன்சொல் வழங்கியவென் வன்மனத்தை
     நாய்க்கடையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.

உரை:

     வாயாற் சொல்லலாகாத வன்சொற்களைப் பேசிய நாயிற் கடையனாகிய யான் என் மனத்தின்கண் அதனை நினைக்கும் போதெல்லாம், என் தேகத்து நாடிகள்யாவும் துடிக்கின்றன, காண். எ.று.

     ஒழுக்க முடையோர் வாயாற் சொல்லுதலில்லாத இழிசொல், இங்கே “வாய்க் கடையா வன்சொல்” எனப்படுகிறது. நாடிகள் - தொகையால் மூன்றும், வகையால் பத்தும், விரிவால் எழுபத் தீராயிரமுமாம் என்று சிலப்பதிகார வுரை கூறுகிறது. இடை, பிங்கலை, சுழுமுனை எனத் தொகை மூன்று; பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், கூர்மன், நாகன், கிருகரன், தேவ தத்தன், தனஞ்சயன் என வகையாற் பத்து; இவை எழுபத் தீராயிரமாய் விரியும். “நாடிகள் எழுபத்தீராயிரத்தினும் தச நாடிகள் பிரதான மெனக் கொள்க” என்பர்.

     (53)