2923.

     கன்றி யுரைத்த கடுஞ்சொற் கடுவையெலாம்
     நன்றியிலே னெண்ணுதொறு நாடி நடுங்குதடா.

உரை:

     மிகவும் பயின்று மொழிந்த கடுஞ் சொற்களின் கடுமை முழுதையும் நன்றி யுணர்வில்லாத யான் நினைக்குந் தோறும் என் தேக நாடிகள் யாவும் துடிக்கின்றன, காண். எ.று.

     கன்றுதல் - பழகுதல். பன்னாள் உரைத்துப் பழகி நாத் தடித்த கடுஞ்சொற்கள் என்றற்குக் “கன்றி யுரைத்த கடுஞ்சொல்” எனவும், அச்சொல்லின் கடுமை கேட்போர் செவியில் நஞ்சுபோல் வருத்துதல் தோன்றக் கடுமையெனவும் கூறுகின்றார். கடுஞ்சொற் கடுவெனக் கொண்டு கடுஞ் சொல்லின் நச்சுத் தன்மை யென்பாரும் உண்டு. நன்றியிலேன் - நன்றி யுணர்வில்லாத யான்; நன்மைப் பண்பு இல்லாதேன் எனலுமாம்.

     (54)