2926.

     வஞ்சனையா லஞ்சாது வன்சொல் புகன்றவெலாம்
     நஞ்சனையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.

உரை:

     வஞ்ச மனத்தால் சிறிதும் அச்சமடையாமை கொண்டு வன்சொற்களே தொடர்ந்து மொழிந்ததனால் நஞ்சின் மறுதோற்றமான நான் எண்ணும் போதெல்லாம் என் தேகநாடி அனைத்தும் துடிக்கின்றன காண் எ.று.

     வஞ்சனைப் பழக்க மிகுதியால் அச்சாமை தோன்றியது என்பார் வஞ்சனையாலஞ்சாது என்றார். வஞ்சனையே கொள்வார் உள்ளம் முடிவில் நஞ்சாதல் உறுதியாதலால் நச்சனையேன் என்கிறார். நஞ்சனையேன் ஆயினும் உன்னை நினைக்கையில் வன்சொற்கள் கூறியவாற்றால் உடம்பெல்லாம் நடுங்குகின்றது என உரைக்கின்றார்.

     (57)