2928. ஊனமிலா நின்னை யுரைத்தகொடுஞ் சொல்லையெலாம்
ஞானமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
உரை: சிவபெருமானே, குற்றமே யில்லாத வுன்னைக் குற்ற முடையவனாகக் கருதி, ஞான மில்லாமையால் சொல்லிய குற்ற மொழிகளின் கொடுமை யாவும் இப்போது எண்ணுங்கால் என் தேக நாடிகள் யாவும் நடுங்கித் துடிக்கின்றன. காண். எ.று.
ஊனம் - குற்றம். குற்ற முடைய உயிர்கட்கு வேறாய் மேலானவனாகலின், சிவனை “ஊனமிலா நின்னை” என வுரைக்கின்றார். கொடுஞ்சொல், குற்ற முடையனாக எண்ணியேசும் கொடுமையை யுடைய சொற்கள். ஞானத்தாலன்றி இறைவனுடைய நலங்களையறிதல் கூடாதாகலின், “ஞானமிலேன்” எனக் கூறுகின்றார். “ஊனத்திருள் நீங்கிட வேண்டின் ஞானப் பொருள் கொண்டடி பேணும்” (மயிலாடு) என ஞானசம்பந்தர் உரைப்பதறிக. (59)
|