2929. எற்றே மதியிலியே னெண்ணா துரைத்ததனைச்
சற்றே நினைத்திடினுந் தாது கலங்குதடா.
உரை: என்னே, நல்லறி வில்லாமையால் இறைவன் நற்பண்புகளை மனத்தால் நினைக்காமல் உரைத்தொழுகிய சொற்களை யெல்லாம் இப்போது சிறிது நினைத்தாலும் என் தாதுக்கள் நிலைகலங்குகின்றன, காண். எ.று.
எற்று - இரக்கக் குறிப்பு மொழி. “எற்றென் றிரங்குவ செய்யற்க” (குறள்) எனச் சான்றோர் கூறுவது காண்க. மதி - இயற்கை நல்லறிவு. எண்ணுதற் குரியன இறைவன் இறைமைக் குணங்கள். சற்று - சிறிதென்னும் பொருளது. தாது - உடம்பின் தோல், தசை, நரம்பு, எலும்பு முதலியன. மேலே கூறிய நாடிகளும் இத் தாது வகையுள் ஒன்றாமென அறிக. (60)
|