2930.

     இனியேது செய்வே னிகழ்ந்துரைத்த சொல்லைத்
     தனியே நினைத்திடினுந் தாது கலங்குதடா.

உரை:

     இதுகாறும் சிவனை யான் இகழ்ந்து பேசிய சொற்களைத் தனியே யிருந்து ஒன்றொன்றாக நினைத்தாலும் என் தாது கலங்குகிறது. இனி யான் என்ன செய்வேன். எ.று.

     இதுவரையில் நான் சிவனை இகழ்ந்து பேசிய துண்டு; அப் பேச்சுக்களை ஒருசேர வைத்து எண்ணாமல் தனித்தனியாக வைத்து நினைப்பேனாயின், என் உடம்பின் ஒவ்வொரு கூறும் நிலை கலங்குகிறது; ஒருங்கே தொகுத்து நோக்கின் உயிரே நீங்குவது போல்கிறது; இனிச் செய்வ தொன்றும் தெரிகிலேன் என்பாராய், “இனி யேது செய்வேன்” என வருந்துகிறார்.

     (61)