2933.

     வெந்நரகில் வீழும் விளைவால் விளம்பியதை
     என்னரசே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா.

உரை:

     வெம்மை மிக்க நரகத்தில் வீழ்தற் கேதுவாகிய சொற்களைச் சொல்லியதை நினைக்கும் போதெல்லாம். எனக்கு அருளரசாகிய பெருமானே, அச்சம் தோன்றி என்னை விழுங்குகிறது, காண். எ.று.

     வெம்மை நரகு - வெந்நரகு என வந்தது. நரகத் துன்பத்தை விளைவிக்கும் சொற்களைப் பேசியதை, “விளைவால் விளம்பியது” எனக் கூறுகின்றார். நரக வேதனை பற்றிய நினைவு விளைவிக்கும் அச்சம் கருவி கரணங்களைச் செயலற்றயரச் செய்தலால், “என்னை விழுங்குதடா” என வுரைக்கின்றார்.

     (64)