2934.

     நன்கறியேன் வாளா நவின்ற நவையனைத்தும்
     என்குருவே யெண்ணுதொறும் என்னை விழுங்குதடா.

உரை:

     என்னுடைய குரு முதல்வனே, நலம் தருவனவற்றைக் கண்டறியாமல் வீணே யுரைத்த குற்றங்களை இப்போது எண்ணும்போது, அச்சம் மிகுந்து என்னை விழுங்குகிறது, காண். எ.று.

     குரு - அறிவுக்குத் தெளிவு தருபவன். “தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்” (திருமந்.) எனத் திருமூலர் உரைப்பர். நன்கு, நலம் தருவன. பயனில்லன மொழிதல் குற்றமாதலால், “வாளா நவின்ற நவை” என்று கூறுகின்றார். நவை - குற்றம்.

     (65)