2935. ஆவ தறியா தடியே னிகழ்ந்தகொடும்
பாவ நினைக்கிற் பகீரென் றலைக்குதடா.
உரை: விளைவு நினையாமல் அடியவனாகிய யான் செய்த கொடிய பாவங்களை நினைக்கும்போது நெஞ்சம் பகீரென்று என்னை வருத்துகிறது, காண். எ.று.
பாவம் - தீவினை. இத் தீவினையைச் செய்தால் இத்தகைய துன்பம் வருமென முன்கூட்டி யறிதல் முறையாகவும், அதனை யறியாமை பற்றி “ஆவ தறியாது” எனவும், அதனால் உண்டான பாவ மிகுதி புலப்பட, “நிகழ்ந்த கொடும் பாவம்” எனவும் இயம்புகின்றார். நெஞ்சில் தோன்றி வருத்தும் அச்சத்தின் மிகுதி விளங்க, “பகீரென்று அலைக்குதடா” என்று கூறுகின்றார். பகீரென்று - குறிப்பு மொழி; திடீரென்றுத் தோன்றும் என்றாற் போல. (66)
|