2937. குற்ற நினைத்த கொடுஞ்சொலெலா மென்னுளத்தே
பற்ற நினைக்கிற் பயமா யிருக்குதடா.
உரை: குற்ற மெனக் கருதியவுடன் சினமுற்றுப் பேசிய கடுஞ்சொற்களனைத்தையும் என் மனத்தின்கண் பொருந்த நினைக்கும்போது இதன் விளைவு என்னாகுமோ என அச்சமெழுந்து வருத்துகிறது, காண். எ.று.
பிறர் செய்வன குற்றமெனத் தெரிந்தவுடன், காணும் தமது மனத்தெழுந்த சினத்தால் கடுமையான சொற்களைப் பேசினமை நினைக்கப் படுதலின், “குற்றம் நினைத்த கொடுஞ் சொலெலாம்” என்று கூறுகின்றார். குற்றமெனக் கண்டவிடத்துப் பொறுத்து இன்சொல்லால் திருத்துவது அறமாகலின், அது செய்யாமை இப்போது நினைவில் தோன்றி வருத்துவதை எடுத்துரைக்கின்றார். (68)
|