2938. எள்ளுகின்ற தீமை யெடுத்துரைத்தே னாங்கதனை
விள்ளுகின்ற தோறுமுள்ளம் வெந்து வெதும்புதடா.
உரை: இகழத்தக்க தீமைகளை அவ்வப்போது யான் எடுத்துப் பேசுவேன்; அப்போது பேசியவதனை இப்போது சொல்லும் போதெல்லாம் என் மனம் வெம்மையுற்று என் தேக முழுதும் படர்ந்து வெதுப்புகின்றது, காண். எ.று.
எள்ளப்படும் தீமை - எள்ளுகின்ற தீமை என வந்தது. “செயப்படு பொருளைச் செய்தது போல” உரைக்கும் மரபு. தீய சொற்களைத் “தீமை” என்கின்றார். விள்ளுதல் - சொல்லுதல், வெந்து தணியாமல் வெம்மையைச் செய்யா நிற்பது விளங்க “வெந்து வெதுப்புதடா” என வுரைக்கின்றார். (69)
|